search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குட்கா ஊழல் வழக்கு - மேலும் 50 அதிகாரிகளுக்கு அமலாக்கதுறை சம்மன்

    குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் சுகாதார அதிகாரிகள் உள்பட 50 அதிகாரிகளுக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பலகோடிகள் ஊழல் நடந்து இருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன் ஒன்றில் வருமானவரிதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி டைரி ஒன்றை கைப்பற்றினர். அதில் குட்கா போதை பொருளை விற்பனை செய்வதற்காக யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

    போலீஸ் அதிகார்கள், சுகாதாரதுறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் யாரும் கைதாகவில்லை.

    குட்கா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்கு பதிவு செய்தனர். சி.பி.ஐ. விசாரணை முடிந்து குட்கா விவகாரம் ஓய்ந்து போயிருந்த நிலையில் அமலாக்கதுறையினர் அதனை கையில் எடுத்துள்ளனர். வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னையில் பணியாற்றும் 2 ஐ.ஜி.க்களுக்கும், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    போலீஸ் அதிகாரிகளில் சுமார் 20 பேர் வரையிலும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புதுறை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் 30 பேர் வரையிலும் குட்கா ஊழலில் தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

    இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அமலாக்கதுறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் குட்கா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    Next Story
    ×