search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி சர்வதே விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தபோதிலும் கடத்தலை தடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரக்கத் நிஷா (38) என்ற பெண் பயணி தனது உடலில் 332 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலி, வளையல்கள், கைச்செயின் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தார். அதனை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி மூலம் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில், கடந்த 5-ந்தேதி இரவு சென்னை, மதுரை, தூத்துக்குடி, கோவை பகுதிகளை சேர்ந்த சுங்கத்துறையின் வருவாய் நுண்ணறிவு பிரிவை சேர்ந்த 22 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் காலை வரை துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 விமானங்களில் வந்த 150 பயணிகளை பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை சிக்கின.

    இதற்கிடையே ஆய்வின்போது பணியில் இருந்தவர்கள் குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன் முடிவில் சிலர் மீது உயரதிகாரிகளிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு உதவி கமி‌ஷனராக பணியாற்றிய பண்டாரம், உதவி கமி‌ஷனர் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும், உதவி கமி‌ஷனர் ஜெயச்சந்திரன் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் மதுரை சர்வதேச விமான நிலையத்தில் உதவி கமி‌ஷனராக பணியாற்றி வந்த ஜெஸ்சி சஜன் திருச்சி விமான நிலைய சுங்கத்துறைக்கும், தயானந்தன், சரவணக்குமார், மனோகரன் ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் தயானந்தன் வான் நுண்ணறிவு பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


    Next Story
    ×