search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)
    X
    மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

    மெட்ரோ ரெயிலில் ‘வைபை’ மூலம் சினிமா-டி.வி.சீரியல் பார்க்கலாம்

    மெட்ரோ ரெயில் பயணிகளை உற்சாகப்படுத்தவும் மகிழ்விக்கும் வகையில் பயணிகளுக்கு சினிமா பாடல், படம் போன்றவற்றை ‘ஆப்’ மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதி, ரெயில் நிலையத்தில் டெலிபோன் வசதி, ‘வைபை’ வசதி போன்றவற்றை வழங்கி வருகிறது.

    சுரங்கப்பாதையில் நெட்வொர்க் வசதி கிடைக்காமல் பயணிகள் செல்போன் பேச முடியாமல் இருந்த நிலை மாறி தற்போது எல்லா ரெயில் நிலையங்களிலும், பயணம் செய்யும் போதும் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் கிடைக்கும் வசதியை தொடர்ந்து தற்போது பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுதவிர அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை உற்சாகப்படுத்தவும் மகிழ்விக்கும் வகையில் பயணிகள் தற்போது சினிமா பாடல், படம் போன்றவற்றை ‘ஆப்’ மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.

    இதற்காக ‘வைபை’ வசதியை இலவசமாக பெறும் வகையில் நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் வைபை ஆன் செய்து இதற்கான பிரத்யேக ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்தால் விரும்பிய பாடல் மற்றும் படங்களை பார்க்கலாம்.

    தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பாடல்களை கேட்டு மகிழலாம். இதுதவிர விரும்பிய டி.வி. சீரியலை கூட மெட்ரோ ரெயில் பயணத்தில் பார்க்க வசதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இலவச ‘வைபை’ மூலம் சினிமா பாடல், படம் மற்றும் டி.வி. சீரியல் போன்றவற்றை பார்க்கும் வசதி செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் இந்த வசதி அனைத்து மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்கள், டெப்போக்களில் கிடைக்கும்.

    நாட்டிலேயே முதல்முறையாக இந்த வசதி சென்னை மெட்ரோ ரெயிலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    பயணிகள் தங்களின் ஸ்மார்ட்போனில் இதற்கான ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இதற்காக வேகமான ‘வைபை’ வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நவீன தொலை தொடர்பு வசதி மூலம் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் இந்த வசதியை பெறலாம். மெட்ரோ ரெயில் சுகமான பயணத்தில் இந்த வசதி பயணிகளுக்கு பொழுதுபோக்கும் வகையில் அமையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×