search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    அவசர சட்டத்தை அரசு அறிவித்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை- முத்தரசன் பேட்டி

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை அறிவித்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இலங்கையில் பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை நாட்டின் அதிபராகவும், அவரது சகோதரர் மகிந்தராஜபக்சே பிரதமராக மாறி இருக்கிறார்கள்.

    இவர்கள் இருவரும் தான் இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த கொடியவர்கள். போர்க்குற்றம் புரிந்து இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாட்டை ஆளுகிற வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருக்கும் சூழலில் மத்திய அரசு அவரிடம் இன படுகொலை குறித்து விவாதித்து சிங்கள மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

    தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை அறிவித்துள்ளது. இது அப்பட்டமாக ஜனநாயக படுகொலை. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×