search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎஸ்பி விஷ்ணுபிரியா
    X
    டிஎஸ்பி விஷ்ணுபிரியா

    டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை கோவை கோர்ட்டில் வாக்குமூலம்

    டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.


    கோவை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 23). கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீஸ் உயர் அதிகாரிகள் அளித்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை ரவி புகார் அளித்தார். புகாரில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி தற்கொலை வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

    இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் மறுவிசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. மறுவிசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்காமல் பழைய விசாரணை அறிக்கையை அப்படியே கொடுத்ததாக குற்றம்சாட்டிய எதிர்தரப்பு வக்கீல் அருள்மொழி மறு விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரவி மறு புலன் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை அளித்த மனுவை தனி புகாராக எடுத்துக்கொண்டு இந்த நீதிமன்றமே விசாரணை நடத்தும்.

    விஷ்ணுபிரியாவை உயர் போலீஸ் அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டினார்களா? என்பது குறித்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.

    இதன் விசாரணை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர் ஆனார். அவர் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

    விஷ்ணுபிரியாவின் தாயாரும் இன்று கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.

    அவர் வருகிற 28-ந் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×