search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்-ரஜினிகாந்த்
    X
    கமல்ஹாசன்-ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்-கமல்ஹாசன் மீது அதிமுக நாளேடு கடும் பாய்ச்சல்

    அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் ரஜினி- கமலை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் ரஜினி- கமலை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. “பதினாறு வயதும் பதறாகும் பொழுதும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அதில் கூறியிருப்பதாவது:-

    தொடங்கப்பட்ட கமலின் கட்சி ஒரே ஒரு தேர்தலோடு முடங்கி போய் விட்டது. இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கே அஞ்சி நடுங்கி போய் விட்டது.

    இந்த நிலையில் கட்சி தொடங்காத ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி கமலோடு இணைந்து செயல்படுவேன் என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்ட திட்டமிடுகிற மடத்தனம் என்பதை காலம் அவர்களுக்கு நிச்சயமாய் உணர்த்தும்.

    சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்று விட்ட கமல், எங்கே அரசியல் கட்சி தொடங்கி ரஜினிகாந்த் தன்னை விட கொஞ்சம் கூடுதலாக ஓட்டு வாங்கி அரசியலிலும் உன்னை விட நானே பெரியவன் என்பதை நிரூபித்து விடப் போகிறாரோ என கணக்கு போட்டு அவரை தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச் செல்வாக்கை மறைத்து விட வேண்டும் என்கிற அவரது நரி கணக்கிற்கு வலியச்சென்று ரஜினி பலிகடா ஆவேன் என்பது பரிதாபம்தான்.

    ஆன்மிக அரசியலை தொடங்கி 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடப் போகிறேன் என்று அறிவிப்பு செய்த ரஜினி பகுத்தறிவு, கம்யூனிசம் என்று பல வேசம் போட்டு ஆன்மிகத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டு அலையும் உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது எலியும், பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம்.

    கல்லை கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதும், கமலோடு கூட்டு வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பதும் வெந்த நெல்லை முளைக்க வைக்க முயற்சிக்கிற கோமாளி காரியம் என்பதை காலம் ரஜினிக்கு கட்டாயம் கற்பிக்கத்தான் போகிறது.

    இதற்கிடையில், கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட்டால் கமல்தான் முதல்-அமைச்சர் என்று கமலின் பழைய கதாநாயகி ஸ்ரீபிரியா முன் அறிவிப்பு செய்திருக்கிறார். இன்னும் என்னென்ன நகைச்சுவைகளை நாடு காண போகிறதோ?

    எப்படியோ காமெடியனாகி போன கமல், ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிந்து அவரையும் தனக்கு சமமாக்க உகந்த நேரம் பார்த்திருக்கும் வேளையில், அந்த வாய்ப்பை ரஜினியே வலியச் சென்று கமலுக்கு வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன்.

    40 ஆண்டு கால நட்பு என்று சொல்லிக் கொண்டே தனக்கு அரசியல் வாய்ப்பை யாசகம் தந்த புரட்சித்தலைவரையே தி.மு.க.வில் இருந்து நீக்கி மலையாளி என்றெல்லாம் மனசாட்சி துளியும் இல்லாமல் பேசிய கருணாநிதியின் மனம் கவர்ந்த சீடனாக கமல்ஹாசனிடம் இருந்து ரஜினி பெறப்போகிற பாடம் ஆறாத காயமாகும். மாறாத தழும்பாகும்.

    அது மட்டுமல்ல, வருடங்கள் கரைந்தாலும் வளர்பிறை சந்திரனாய் நிலைத்து புகழ் கொண்ட நிகரில்லா வள்ளலாம் புரட்சித்தலைவர் என்கிற புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகள் தாங்கள் என்பதை கமலும், ரஜினியுமே காலத்தால் உணர்கிற வாய்ப்பும் காத்திருக்கிறது.

    அப்புறம் என்ன ஊரை தெரிஞ்சிக்கிட்டேன், கமலை புரிஞ்சிக்கிட்டேன்னு ரஜினி பரிதாபமாய் பாடும் வருங்காலம் உறுதியாக உண்டு.

    மன்னாதி மன்னன் மக்கள் திலகமும், விண்முட்ட வந்தாலும் விழி சிமிட்டா வீரத் திருமகள் அம்மாவும் மடியிட்டு வளர்த்த 1½ கோடி சிப்பாய்களின் கழகத்திற்கு அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லை. உச்ச நட்சத்திரமும், உத்தம வில்லனும் ஒன்று சேர்ந்து வந்தாலும் ஒரு நொடியும் அச்சம் என்பது இல்லை.

    கழகத்தை வீழ்த்த நினைத்தவர்கள் காணாது ஒழிந்தார்கள் என்கிற இன்னொரு வரலாற்றை எழுதுவதற்கு ஈரிலை இயக்கத்திற்கு கண்முன்னே காத்திருக்க மேலும் ஒரு கற்கண்டு வாய்ப்பு. வாரே வா.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×