search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    புதுப்பெண் கொலை செய்யப்பட்ட இடத்தை போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    X
    புதுப்பெண் கொலை செய்யப்பட்ட இடத்தை போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    வெள்ளகோவில் அருகே புதுப்பெண் கொடூர கொலை -அமராவதி ஆற்றில் உடல்வீச்சு

    வெள்ளகோவில் அருகே புதுப்பெண் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    நாமக்கல் மாவட்டம் ராமாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திருமங்கை (33). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதம் தான் ஆகிறது.

    இந்த நிலையில் திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மாலமேடு கவுண்டப்ப கவுண்டன் புதூர் கிராமம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    சுடிதார் அணிந்திருந்த நிலையில் திருமங்கை பிணமாக கிடந்தார். அவர் தனது கையில் எம்.எம். என்றும் மார்பு பகுதியில் ஆடம்ஸ் என்றும் பச்சை குத்தி உள்ளார்.

    திருமங்கையை மர்ம நபர்கள் அமராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், வாயில் துப்பட்டாவை திணித்தும் கொன்று இருக்கலாம் என தெரிகிறது.

    இது குறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், தாராபுரம் டி.எஸ்.பி. ஜெயராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதாமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் போலீசார் திருமங்கை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமங்கை கொலை குறித்து அவரது கணவர் ரமேசுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் மூலனூர் விரைந்து வந்தார். உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் திருமங்கை தனது சித்தி மற்றும் சித்தி மகளுடன் மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றதும், பின்னர் அவரது சித்தி மற்றும் சித்தி மகள் அவர்களது வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    திருமங்கை அவர்களை வழியனுப்பி விட்டு தானும் வீட்டிற்கு செல்வதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் மூலனூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமங்கை மூலனூர் அமராவதி ஆற்றங்கரைக்கு வந்தது எப்படி? அவரை யாராவது கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத அமராவதி ஆற்றின் கரை, வீட்டு மனை பிரிக்கப்பட்ட பகுதி போன்றவற்றில் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு பிணத்தை வீசி செல்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×