search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் லியோனி
    X
    திண்டுக்கல் லியோனி

    தமிழகத்தின் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்புவார்- திண்டுக்கல் லியோனி பேச்சு

    தமிழகத்தின் வெற்றிடத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நிரப்புவார் என்று திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். செ.ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நகர செயலாளர் சுப.தமிழழகன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இந்த சிலைக்கு காவி சாயமும், விபூதியும் அடிக்க முடியாது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது. திருவள்ளூர் கருத்தை விபூதியால் மறைக்க முடியாது. அனைத்து மதத்தினரின் பொதுவான திருமறையாக திருக்குறள் உள்ளது. இந்து மதத்திற்கு தி.மு.க விரோதி அல்ல.

    திருவாரூர் தேரை வீதிக்கு இழுத்து காட்டியது இந்த தி.மு.க தான். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யும் அவலம் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி, நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அ.தி.மு.க. வளர்ச்சி அடைந்து விட்டதாக கருதமுடியாது. தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு வெற்றிடத்தை லால் பகதூர் சாஸ்திரி அலங்கரித்தார். பின்னர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் நிரப்பினர்.

    தற்போது தமிழகத்தின் வெற்றிடத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நிரப்புவார் என்பதை தி.மு.க.வினரும் பொதுமக்களும் அறிந்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். தற்போது அதிமுக தலைமையில் தான் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் சேக் தாவூத், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×