search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி
    X
    உதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி

    தமிழக உரிமைகளை அ.தி.மு.க. அரசு அடகு வைத்துவிட்டது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    தமிழக உரிமைகளை அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் தி.மு.க., பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்து 3 வருடங்கள் ஆகிய நிலையில் அவருக்காக ஒரு புகழஞ்சலி கூட்டம் கூட அ.தி.மு.க. நடத்தவில்லை. ஆனால் கருணாநிதிக்கு தி.மு.க. சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தான் தி.மு.க.விற்கும் அ.தி. மு.க.விற்கும் இருக்கும் வித்தியாசம். நாங்கள் கொள்கை பிடிப்பு உள்ளவர்கள். கருணாநிதி எங்களை அப்படி வளர்த்துள்ளார்.

    நீட் தேர்வினால் பலியான அனிதாவின் மரணத்திற்கு அ.தி.மு.க.வும் அதற்கு துணை நின்ற பா.ஜ.க.வும் தான் காரணம். பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யும் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார். அதை கூற வைத்தவர் மு.க.ஸ்டாலின்.

    அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்றார்கள். அவர்கள் கூட் டணி கட்சி தான் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தவில்லை. கோச்சிங் சென்டர்கள் வைத்து பணம் சம்பாதிக்கவே நீட் தேர்வை கொண்டு வந்து உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

    இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. போராட்டம் அறிவித்தவுடன் இந்தி திணிப்பை திரும்ப பெற்றார்கள். அப்போது ஸ்டாலின் போராட்டம் ரத்து என கூற வில்லை. போராட்டம் ஒத்திவைப்பு என்று தான் கூறினார். இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வந்தால் தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். பணம் இல்லாதவனுக்கு கல்வி இல்லை என கூறுவது தான் புதிய கல்வி கொள்கை.

    வெளிநாடு சென்று வந்த பின்பு புதிய தொழிற் சாலைகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால் அவ்வாறு தொடங்கப்படாமல் ஏற்கனவே செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு கொண்டு இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார்.

    இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைந்து கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் தான்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பல ரெய்டுகள் நடந்துள்ளது. ஆனால் அந்த ரெய்டு மூலம் கைப்பற்றப்பட்ட பணம் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய வற்றை கையில் வைத்திருக்கும் பா.ஜ.க., எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என நினைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை அனைவரும் அறிந்ததே.

    தமிழ்நாட்டில் தான் குற்றங்கள் அதிகம் நடப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சென்ற ஆண்டு அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மோடியின் அடிமைகளாக உள்ளனர். அவர்கள் தங்கள் சுய மரியாதையை, தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள்.

    தமிழக பிரச்சினை மட்டு மல்ல. இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட எந்த மாநிலத்தில் பிரச்சினைகள் நடந்தாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க.தான். அதனால் தான் தி.மு.க.வில் நாம் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். தி.மு. க.வின் ஆட்சி விரைவில் தமிழ்நாட்டில் அமையும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    Next Story
    ×