search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    காங்கிரசை விமர்சிக்கும் பா.ஜனதா காணாமல் போகும் - நாராயணசாமி

    காங்கிரசை விமர்சிக்கும் பா.ஜனதா காணாமல் போகும் என்றும் பா.ஜனதாவின் வெளிவே‌ஷத்தை மக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்றும் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைசியாள் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால்நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    சுதந்திரமடைந்தபோது இந்தியா ஏழை நாடாக இருந்தது. சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. சாலை, கல்வி, மருத்துவம் என பல துறையில் வளர்ச்சி இல்லாத நிலை இருந்தது.

    பிரதமர் நேரு அமைச்சர் களோடு இணைந்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர். 5 ஆண்டு திட்டங்களை கொண்டுவந்து மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து விவசாயம், கல்வி, மருத்துவம், சமூக நல திட்டங்களை நிறைவேற்றினார்.

    இந்தியா வல்லரசாக வேண்டும் என நேரு நினைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எந்த ஆட்சி வந்தாலும் நேருவின் வெளியுறவுக்கொள்கையை ஏற்காமல் இருக்க முடியாது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியும் தற்போது அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறார். 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எதையும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் வளர்ச்சியை கொடுத்துவிட்டோம் என உண்மைக்கு புறம்பான பொய்யை கூறி வருகின்றனர்.

    விஞ்ஞானிகளை உருவாக்கியது, விவசாயத்தில் புரட்சி கண்டது, அணைகள் கட்டியது, மின் உற்பத்தியை பெருக்கியது என அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது. பா.ஜனதா ஆட்சியில் என்ன செய்தது?

    காங்கிரஸ் கொண்டுவந்த வேலைவாய்ப்பு, வீடு கட்டும் திட்டம், காப்பீடு திட்டம் பெயரை மட்டும் மாற்றி செயல்படுத்துகின்றனர். புதிய திட்டம் எதையும் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி தற்போது 4 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுதான் சாதனையா?

    பிரதமர் மோடி காங்கிரசையும், நேருவையும் விமர்சனம் செய்வது சகித்துக்கொள்ள முடியாது. நாட்டிற்காக பா.ஜனதா ரத்தம் சிந்தி உள்ளதா? நாட்டின் வளர்ச்சியில் பங்கு உண்டா? என அனைவரும் சிந்திக்க வேண்டும்.

    நேரு பிறந்தநாளில் அவரின் வழியில் நடப்போம், இந்திரா, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங், அன்னை சோனியா, ராகுல் வழியில் நடப்போம் என நாம் சூளுரை எடுக்க வேண்டும்.

    நம்மை விமர்சிப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். சரித்திரம் மாறுகிறது. பொய்யை கூறி தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது. பா.ஜனதாவின் வெளிவே‌ஷத்தை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×