search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிச்சைக்காரர்கள்
    X
    பிச்சைக்காரர்கள்

    புதுவையில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    புதுவையில் நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம். காந்தி வீதி, நேரு வீதி, மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, தூய இருதய ஆண்டவர் ஆலயம், ரெயில் நிலையம், கோரிமேடு, ஜிப்மர், மேட்டுப்பாளையம், கருவடிக் குப்பம் உள்ளிட்ட இடங்களில் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

    அதுவும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருகின்றனர். அதில் வட இந்தியர்கள் அதிக அளவில் குழந்தைகளுடன் வருகின்றனர்.

    அவர்கள் குழந்தைகளை வைத்தே பிச்சை எடுக்கின்றனர். புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான வயதானவர்கள் வருகின்றனர். அவர்கள் தனது சொத்தை மகன் பெயருக்கு எழுதி வைத்துவிட்ட நிலையில் மகன் மற்றும் மருமகள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதால் சாப்பாட்டுக்காக பிச்சை எடுக்க புதுவை வருகின்றனர்.

    இவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துவிடுகின்றனர். பின்பு இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். அதில் சிலர் இங்கு கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு பிச்சை எடுக்கும் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

    சிலர் வருமானம் வருவதால் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்களை பிச்சை எடுக்க ஊக்குவிக்கிறார்கள்.

    அவர்கள் மூதாட்டிகளை பிச்சை எடுப்பதற்காக காலையில் வீட்டில் இருந்து கொண்டு வந்து விடுகின்றனர். மீண்டும் இரவு அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள்.

    இவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினால் போலீசாரிடம் மூதாட்டியின் மகன்கள் கூறும்போது, காலையில் கோவிலுக்கு செல்கிறேன் என்று வீட்டில் சொல்லி விட்டு செல்வார்கள். பிச்சை எடுப்பது எங்களுக்கு தெரியாது என்று கூறுகின்றார்கள்.

    மேலும் சிலர் மது குடிப்பதற்கு என்று பிச்சை எடுக்கின்றனர். புதுவையில் மதுபானம், சாராயம் விலை குறைவு என்பதால் சிலர் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு பிச்சை எடுக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு பிளாட்பாரத்தில் தூங்குகின்றனர். அவர்கள் வீடு இருந்தாலும் அங்கு செல்வதில்லை.

    இதேபோல் வட இந்தியாவில் இருந்து ஏராளமானோர் புதுவை வருகின்றனர். அவர்கள் இங்கு பிளாட்பாரத்தில் தங்குகின்றனர். பிச்சை எடுக்கும் பணம் போக குடும்ப செலவுக்கு திருட்டு செயலில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த 3-ந்தேதி புதுவையில் கேப்டன் மேரி ஈஸ்வர் தெருவில் வசிக்கும் டாக்டர் வீட்டில் செஞ்சி சாலையில் பிளாட்பாரத்தில் வசிக்கும் வினோத் என்பவர், மாடி வழியாக புகுந்து 2 செல்போன்கள், ரூ.6 ஆயிரம் ரொக்கம், 900 அமெரிக்க டாலர்கள் திருடினான்.

    இதேபோல் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. அதில் ஈடுபடும் நபர்கள் தங்களுக்கு 18 வயது ஆகவில்லை என கூறி தப்பித்து விடுகின்றனர்.

    இதனால் போலீசார் பிச்சை எடுப்பவர்களை பிடித்து அவரிடம் முறையான விசாரணை நடத்தி அவர்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தார்கள்? இதற்கு யார் காரணம்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    முதியோர் இல்லங்கள் அதிகமாக இருந்தாலும் அங்கு செல்லாமல் பிச்சை எடுக்க வருவது எதற்காக என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

    Next Story
    ×