search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட தில்லைநாயகி
    X
    கொலை செய்யப்பட்ட தில்லைநாயகி

    கண்டமங்கலம் அருகே பெண் கொலை- வாலிபர் கைது

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பெரியபாபு சமுத்திரம். இந்த பகுதியை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவரது மனைவி தில்லைநாயகி(வயது 45).

    மோகனுக்கு பெரியபாபு சமுத்திரம் பம்பையாற்று பகுதியில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு நேற்று முன்தினம் மதியம் தில்லைநாயகி தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் மோகன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் போலீசார் பெரியபாபுசமுத்திரம் கரும்பு தோட்டப்பகுதிக்கு சென்று தேடினர்.

    அப்போது சோளத்தட்டையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதரில் ஒரு சாக்குமூட்டை இருந்தது. அதனை போலீசார் சந்தேகமடைந்து பிரித்து பார்த்தனர். அதன் உள்ளே தில்லைநாயகி கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. யாரோ மர்மமனிதன் அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டு சாக்குமூட்டையில் அவரது பிணத்தை கட்டி வீசியது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ்சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் மோகன் தாசுக்கும், அவரதுபக்கத்து நிலத்தை சேர்ந்த அருள்ராஜ்(35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அருள்ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய போது அருள்ராஜ் உண்மையை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அருள்ராஜை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது சொந்த ஊர் பெரியபாபுசமுத்திரம். அங்கு எனக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் உள்ளது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது தாய் மகாலட்சுமி புதுவையில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலைபார்த்து வருகிறார்.

    புதுவை மாநிலம் மடுகரையில் அவர் வசித்து வந்தார். அவருடன் நானும் அங்கு தங்கியிருந்தேன். அங்குள்ள மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தேன். அதன்பின்பு நான் பணியில் இருந்து நீக்கப்பட்டேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நான் எனது சொந்த ஊரான பெரியபாபுசமுத்திரம் வந்தேன். அங்கு எனது கரும்பு தோட்டத்தை பார்வையிட்டு வந்தேன். எனக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றேன். அப்போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் மோகன் மனைவி தில்லைநாயகி தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்.

    அப்போது எனக்கும், தில்லைநாயகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தில்லைநாயகி என்னை ஆபாசமாக திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து தில்லைநாயகியை தாக்கினேன். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்து இறந்தார். இதனைத்தொடர்ந்து நான் அவரது காது, மூக்கு, கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலி உள்பட 3 பவுன் தங்க நகைகளை கழற்றினேன்.

    பின்பு அவரது உடலை பம்பை ஆற்றில் புதைக்க திட்டமிட்டேன். இதற்காக நான் ஒரு சாக்குமூட்டையில் அவரது உடலை கட்டினேன். பின்னர் அங்கு சோளத்தட்டையில் உள்ள புதரில் சாக்குமூட்டையை மறைத்துவிட்டு சென்றேன்.

    ஆனால் போலீசார் இந்த கொலையில் துப்புதுலக்கி என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து அருள்ராஜ் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அருள்ராஜை இன்று விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.
    Next Story
    ×