search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆசிரியை அடித்து கொலை - கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    சந்தவாசல் அருகே நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஆசிரியை அடித்து கொன்றதாக கைதான 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துமேரி (வயது 65). ஓய்வுபெற்ற ஆசிரியை.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. முனியந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு இருபுறமும் கடைகள் அமைந்துள்ளன.

    லூர்துமேரி கடந்த 5-ந்தேதி காலை வீட்டில் தலை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    வீட்டு முன்பு அவரது நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி.க்கள் செந்தில், குணசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், ஜெயப்பிரகாஷ், விநாயக மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆசிரியை தனியாக வசித்து வந்ததை நன்று அறிந்தவர்கள் தான் கொலையை அரங்கேற்றி உள்ளனர். நாயை கொன்று விட்டே வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

    இதனால் ஆசிரியை நாய் வளர்த்து வருவதை அறிந்தே அவர்கள் வந்துள்ளனர். இவர்களை பார்த்த நாய் குரைத்ததும் முதலில் அதை அடித்து கொன்றுள்ளனர். அதன் பின்னரே ஆசிரியை சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியையின் உறவினர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் போலீசார் வீட்டை ஒட்டி ஆசிரியை வாடகைக்கு விட்டிருந்த கடைகளின் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் அருகில் வசித்து வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் இறைச்சி கடை நடத்தி வரும் கேளூரை சேர்ந்த இலியாஸ் (30) என்பவர் மட்டும் போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இலியாஸ் தனக்கு அறிமுகமான வாலாஜா அடுத்த கல்மேல் குப்பம் யூசப் (34), மூசா(40) மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த விஜய்குமார் (35). ஆகிய 3 பேரை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இலியாஸ் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நகை, பணத்திற்காக ஆசைப்பட்டு ஆசிரியையை படுகொலை செய்ததாக தெரிவித்தார்.

    போலீஸ் விசாரணையில் இலியாஸ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் லூர்துமேரி வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் கறிக்கடை வைத்துள்ளேன். லூர்து மேரி தனியாக வசித்து வந்தார். அவருக்கு வீட்டின் அருகில் உள்ள கடைகள் மூலம் வாடகை வருமானம் வருகிறது.

    அவர் கைகளில் விதவிதமாக பிரைஸ்லெட் போடுவார். மேலும் கம்மல் செயின் போன்றவைகளும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் அவரிடம் அதிக நகைகள் இருக்கும் என்று நினைத்தேன். அவரை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.

    இதுபற்றி எனது கூட்டாளிகளிடம் தெரிவித்தேன். சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு 4 பேரும் ஆசிரியை வீட்டுக்கு சென்றோம். அவர் என்னை பார்த்ததும் என்ன இப்போது வந்திருக்கிறீர்கள் என கேட்டார். அப்போது அவர் வளர்க்கும் நாய்க்கு இறைச்சி கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தேன். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதே என்னுடன் வந்திருந்தவர்கள் அவரை பின்னாடி இருந்து தலையில் அடித்தனர். இதில் அவர் நிலைகுலைந்து விழுந்தார். அவரை வீட்டுக்குள் தூக்கிச்சென்றோம்.

    அந்த நேரத்தில் அவரது நாய் எங்களை பார்த்து குரைத்தது. இதனால் அதனையும் கொன்று வீசினோம். லூர்துமேரியை வீட்டுக்குள் ஒரு நாற்காலியில் அமர வைத்தோம். நாங்கள் தாக்கியதில் அவர் இறந்துவிட்டார்.

    இதனையடுத்து வீட்டில் உள்ள பீரோக்களில் பணம் உள்ளதா? என தேடினோம். அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்தோம்.

    பின்னர் சிலிண்டர் வெடித்து அவர் இறந்ததுபோல காட்டிக் கொள்வதற்காக அவரை சுற்றி துணிகளை போட்டு ஒரு சிலிண்டரை திறந்து விட்டு அதில் ஒரு சேலையை கட்டினோம். வீட்டிற்கு வெளியே சேலையின் ஒரு பகுதியை கொண்டு வந்து அதில் தீ வைத்துவிட்டு வந்து விட்டோம். ஆனால் பாதியிலேயே தீ அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை.

    பின்னர் நகையுடன் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டோம். எங்கள் மீது சந்தேகம் வராது என நினைத்தோம். ஆனால் போலீஸ் விசாரணையில் எங்களை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதான 4 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் கவரிங் நகைகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வீட்டின் அருகிலேயே வியாபாரம் செய்தவர் பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்த பொதுமக்கள் பதட்டம் மற்றும் வியப்படைந்தனர்.

    தனியாக இருப்பவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் கொலையான ஆசிரியை லூர்துமேரியின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்ததால் நேற்று தான் அவர்கள் கிராமத்திற்கு வந்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசிரியையின் உடலை அடக்கம் செய்தனர்.
    Next Story
    ×