search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபாமா பல்கலைக்கழகம்
    X
    சத்யபாமா பல்கலைக்கழகம்

    சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு

    சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பகுதிநேர எம்.இ., எம்.டெக். படிப்புகள் செல்லும் என ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவகல்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பார்ட் டைம் எம்.இ., எம்.டெக், படித்த மாணவர்களின் பட்டம் செல்லாது என ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் ஸ்ரீ காளகஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை பார்த்த 6 உதவி பேராசிரியர்கள் வேலை இழந்தனர். பாதிக்கப்பட்ட 6 பேரும் தமிழக தகவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டனர். 

    இதையடுத்து பார்ட் டைம் எம்.இ., எம்.டெக். படிப்புகள் செல்லும் என்பதற்கான ஆவணங்களை ஆந்திர அரசு மற்றும் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதுடன், 2 மாதங்களுக்கு இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து சுமூக சூழலை உருவாக்க வேண்டும், என சத்யபாமா பல்கலைக்கழக பதிவாளருக்கு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் உத்தரவிட்டார். 

    அதன்படி சத்யபாமா பல்கலைக்கழக பதிவாளர், உரிய ஆவணங்களை அனந்தபுரம் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்து, தாங்கள் நடத்தும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். முழுநேர எம்.இ., எம்.டெக். டிகிரிக்கு சமமானது எனவும் அதை ஆணையாக வெளியிடவும் வேண்டுகோள் விடுத்தார். 

    இதனை ஏற்றுக்கொண்ட அனந்தபுரம் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நிலைக் குழுவிற்கு அனுப்பியது. அக்குழு ஆவணங்களை சரிபார்த்து அவற்றை தகுதியானதாக கருதி ஏற்றுக்கொண்டது.

    மேலும் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டங்கள் முழுநேர படிப்புக்கு இணையானது என சான்றளித்துள்ளது. இதனால் வேலையிழந்த ஆந்திர மாநில 6 உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கவும், அவர்கள் பணிபுரிந்து வந்த ஸ்ரீ காளகஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கும் பரிந்துரை செய்துள்ளது.

    இதன்மூலம் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பகுதிநேர எம்.இ., எம்.டெக் படித்த அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×