search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி கோவில் தங்க கோபுரம் முன்பாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
    X
    பழனி கோவில் தங்க கோபுரம் முன்பாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

    அயோத்தி தீர்ப்பு எதிரொலி - பழனி முருகன் கோவிலுக்கு உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

    அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக பழனி கோவிலில் இன்று உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    பழனி:

    அயோத்தியில் ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    குறிப்பாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்கள், மசூதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். முக்கிய இடங்களில் வரும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் சந்தேகத்துக்கு இடமாக வரும் நபர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டன.

    பழனி தண்டாயுதபானி கோவிலில் இன்று அதிகாலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, மலைக்கோவில், அன்னதானக்கூடம், பிரசாத மையம் போன்ற அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மலைக்கோவில் தங்க கோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    தீர்ப்பு இன்று வெளியாகும் என முன்னரே தெரிய வந்ததால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். வெளியூரில் இருந்து கொடைக்கானலில் தங்கிய ஒரு சில பயணிகளும் நேற்றே தங்கள் ஊருக்கு திரும்பினர்.

    இதனால் கொடைக்கானல் நகரில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் அனைத்தும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுவாக வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அந்த பயணிகள் கூட தற்போது வராததால் கொடைக்கானல் நகரின் பெரும்பாலான இடங்கள் அமைதியாக காணப்பட்டது.

    போலீசார் மட்டும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு அசம்பாவிதம் நடைபெறாமல் கண்காணித்து வந்தனர். மேலும் இதைத் தொடர்ந்து கன்னிவாடி, மூலச்சத்திரம், ஆத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×