search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

    கூடலூர் அருகே 11 டன் ரேசன் அரிசி மூட்டைகள் கேரளாவுக்கு கடத்தல்- 2 பேர் கைது

    கூடலூர் அருகே 11 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை வியாபாரிகள் சிலர் லாப நோக்கத்துடன் பதுக்கி அதனை கேரளாவுக்கு கடத்தும் சம்பவம் அடிக்கடி நடத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குமுளி மலைச்சாலை, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் வருவாய்த்துறையினர் மற்றும் உணவு பொருள் கடத்தல் துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து வருகிறது. ஜீப்களிலும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி தற்போது லாரியில் கடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    குமுளி மலைச்சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ எடையில் 220 பைகளில் 11 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த ரேசன் அரிசி கோம்பை, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்டு கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லலப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் ரேசன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்து உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். லாரியை ஓட்டி வந்த மூங்கில் பள்ளத்தை சேர்ந்த பினிஷ் (வயது35), லாரி உரிமையாளரான ராமக்கால் மெட்டு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் திண்டுக்கல்லில் இருந்து லாரியில் உத்தமபாளையம் வந்துள்ளனர். அங்கு வியாபாரிகள் தயார் நிலையில் வைத்திருந்த ரேசன் அரிசியை எடுத்துக் கொண்டு கோம்பைக்கு வந்தனர். அங்கும் வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகளை எடுத்துக் கொண்டு கேரளாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த அரிசி கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்று லோயர்கேம்ப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×