search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி அதிக ஓட்டுக்களை பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.

    அதேபோல கனிமொழி வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த சந்தானராஜ் என்பவரும் தனியாக தேர்தல் வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையில் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கனிமொழிக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மனுவை தாக்கல் செய்தார்.

    அதில், கனிமொழி வெற்றியை எதிர்த்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார். அந்த பத்திரிகை விளம்பரத்தை பார்த்து இந்த மனுவை தாக்கல் செய்கிறேன். கனிமொழி தேர்தல் வெற்றியை எதிர்த்து நான் தேர்தல் வழக்கு தொடர விரும்புகிறேன். இதற்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, மனு தாக்கல் செய்ய தேவையான கட்டணத்தை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் செலுத்த மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையை 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஏற்கனவே, சந்தானராஜ் என்ற வாக்காளர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மேலும் ஒரு வாக்காளர் முத்துராமலிங்கம் என்ற மற்றொரு வாக்காளரும் தேர்தல் வழக்கு தொடர மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×