search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்ட காட்சி.
    X
    ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்ட காட்சி.

    கொடைக்கானல் போட் கிளப் சீல் வைத்து மூடப்பட்டது

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஏரியை ஒட்டியுள்ள 8 சென்ட் நிலம் போட் கிளப்புக்கு கடந்த 1890-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் குத்தகைக்கு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1921-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 2-வது தவணையாகவும், 1970-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 3-வது தவணையாகவும் குத்தகைக்கு விடப்பட்டது.

    இந்த உரிம காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததை அடுத்து இது குறித்து அப்போதைய மாவட்ட கலெக்டர் வினய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் போட் கிளப் வசம் இருந்த உரிமம் துண்டிக்கப்பட்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் வினய் மாறுதலாகி சென்று விட்டதால் இது குறித்து தற்போதைய மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி சென்னை கூடுதல் செயலாளரிடம் அறிக்கை அளித்தார்.

    கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் சார்பிலும் தனியார் ஓட்டல் நிறுவனம் சார்பிலும் படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் நகராட்சிக்கும் மீன் வளத்துறைக்கும் எந்தவித நன்மையும் கிடைக்காததால் போட் கிளப்புக்கான குத்தகையை நீட்டிக்க தடை விதிக்க வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் ஏரியில் போட் கிளப், தனியார் ஓட்டல்கள் சார்பில் படகு சேவை நடத்த தடை விதிக்கப்பட்டது. ஏரியில் உள்ள கட்டிடத்துக்கு சீல் வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து நேற்று மாலையே அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலை நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவுபடி நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் சரவணன், மேலாளர் சுந்தர்சிங், பார்த்தசாரதி, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து போட் கிளப்பில் டிக்கெட் வாங்கும் இடம் மற்றும் கேண்டீன் ஆகியவற்றுக்கு பூட்டி சீல் வைத்தனர். மேலும் படகுகளையும் இயக்க முடியாத அளவுக்கு கயிறு வைத்து கட்டினர்.

    இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதனிடையே கொடைக்கானல் ஏரி குத்தகை காலத்தை மேலும் 49 ஆண்டுகள் நீடிக்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடக் கோரி கொடைக்கானல் போட் கிளப் செயலர் ராமச்சந்திர துரைராஜா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கொடைக்கானல் ஏரி நகராட்சிக்கு சொந்தமானது. அதில் தனியார் கிளப்புக்கு படகு சேவை நடத்த அனுமதி வழங்க முடியாது என்றனர். இதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


    Next Story
    ×