search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஜி வரதராஜூ
    X
    ஐஜி வரதராஜூ

    திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - மர்ம நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

    திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூ கூறினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சேறு, சகதியை வீசி சிலர் அவமதிப்பு செய்தனர்.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம் ஆகியோர் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதை அறிந்த திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூ, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. வரதராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில், பிள்ளையார்பட்டியை சேர்ந்த கண்ணன்(வயது43) என்பவர் புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலகம் செய்ய தூண்டுதல்), 153ஏ (சாதி, மதம், இனம், மொழி, சமயம் தொடர்பாக விரோத உணர்வுகளை தூண்டுதல்), 153ஏ(பி)(பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 504(பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சட்டப்பிரிவுகளால் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாறன், கண்ணன், கீர்த்திவாசன், தென்னரசு ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் இரவு 11 மணிக்கு மேல் ஒரு நபர் தனியாக சென்று இந்த செயலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் சிலையின் அருகே கண்காணிப்பு கேமரா இல்லை. அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நடுத்தர வயதுடைய நபர், வேட்டி கட்டிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவத்தில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இல்லை. இது தனிப்பட்ட வி‌ஷயமாக நடந்துள்ளதாகத்தான் நாங்கள் கருதுகிறோம். டெல்டா மாவட்டங்களில் இதுமாதிரியான சம்பவங்கள் இதற்கு முன் நடைபெற்றதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.




    Next Story
    ×