search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் சார்பதிவாளர்
    X
    பெண் சார்பதிவாளர்

    டிபன் பாக்சில் லஞ்ச பணத்தை அடைத்து வைத்த பெண் சார்பதிவாளர் சிக்கினார்

    சங்ககிரியில் பெண் சார்பதிவாளர் லஞ்ச பணத்தை டிபன் பாக்சில் மறைத்து வைத்தது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த 29 கிராம மக்கள் பத்திரங்களை பதிவு செய்தல், நகல் எடுத்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்பட பல்வேறு சேவைகளை பெற வந்து செல்கின்றனர்.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடம் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து ஊழல் தடுப்பு ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கோமதி மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து சார்பதிவாளர் இந்திராகாந்தி கைப்பையை சோதனை நடத்தியபோது அதற்குள் இருந்த டிபன் பாக்சில் ரூ.39 ஆயிரத்து 500 மற்றும் அலுவலர்களிடம் இருந்து 21 ஆயிரத்து 500 கணக்கில் வராத பணம் என மொத்தம் 61 ஆயிரத்ததை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர், தலைமை எழுத்தர் ஜெகதீசன், இளநிலை அலுவலக உதவியாளர் உமாமகேஷ்வரி, கணினி இயக்குபவர்கள் சசிகலா, மனோஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படட்டது. பின்னர் சார்பதிவாளர் இந்திரா காந்தி, தலைமை எழுத்தர் ஜெகதீசன், இளநிலை உதவியாளர் உமாமகேஷ்வரி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

    அப்போது சார்பதிவாளர் இந்திராகாந்தி மீது குமாரபாளையத்தில் பணிபுரிந்த போது ஏற்கனவே ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த மாதம் 29-ந் தேதி முதல் 2-ந் தேதியான இன்று வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×