search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வாழப்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், கொங்கணாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 32). இவர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தஜோதி(27). இத்தம்பதியரின் மகள் திவ்யதர்ஷினி(6). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக திவ்யதர்ஷினிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சோமம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்தார்.

    இந்த நிலையில் திவ்யதர்ஷினியின் உடல்நிலை மோசம் அடைந்ததால் நேற்று காலை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியான சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளையும், சுற்றுப் புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மருத்துவ குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×