search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல் பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் வினய் பார்வையிட்டார்
    X
    கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல் பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் வினய் பார்வையிட்டார்

    மதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மதுரையில் உள்ள உலகத்தமிழ் சங்கத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5 கட்ட அகழாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

    கீழடி அகழாய்வு பொருட்களை ஆய்வு செய்ததில் அவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் பெங்களூருவில் பாதுகாத்து வருகின்றனர். தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் கிடைத்த பொருட்களை கீழடியிலேயே காட்சிப்படுத்த வேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள உலகத்தமிழ் சங்கத்தில் கீழடியில் கிடைத்த பொருட்களை கண்காட்சியாக வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

    அதன்படி, 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்களை அங்கு பொதுமக்கள் பார்த்து அறியும் வகையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று உலகத்தமிழ் சங்கத்தில் நடந்தது.

    கண்காட்சியை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்பட பலர் சென்னையில் கலந்து கொண்டனர்.

    அதேபோல தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், தொல்லியல்துறை இணை இயக்குனர் சிவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அங்கு 2 பெரிய அறைகளில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொருட்களை உரிய விவரங்களுடன் வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

    கீழடியில் தந்தத்தால் ஆன வட்டு காய்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    முற்காலத்தில் ஒருவர் மற்றொருவரிடம் கருத்துகளை பரிமாறிக்கொள்ள பொது மொழி வழக்கில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களின் எண்ணங்களை மற்றவர்களிடம் தெரிவிக்க வரி வடிவிலான எழுத்துக்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    குறிப்பாக, மண்பானைகளில் மீன் போன்ற குறியீடு பொறிக்கப்பட்டு இருந்தது. இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மீன் குறியீடு எதை குறிக்க பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. அது போல, வில், வளையம் போன்ற குறியீடுகளும் பானைகளில் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கடலில் விளையும் சங்குகளை சேகரித்து அறுத்து அணிகலன்கள் செய்யும் வழக்கம் சங்க கால மக்களிடையே இருந்துள்ளது. அவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    காட்டுப்பன்றியின் உருவம் பொறித்த சூதுபவளம்

    இரும்பு, தந்தம், செம்பினால் ஆன ஆயுதங்கள் மற்றும் சிறிய வடிவிலான பல பொருட்களையும் கீழடியில் பயன்படுத்தியுள்ளனர். அவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    சுடுமண்ணால் ஆன பானை, மனிதன் மற்றும் விலங்குகளின் உருவம், செங்கற்கள் ஆகியவையும் காட்சிப்பொருளாக இருக்கின்றன.

    கீழடியில் கிடைத்த தங்க ஆபரணம்

    எழுத்தாணிகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் என ஏராளமானவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

    ‘3டி’மூலமாகவும் கீழடியில் கண்டெடுத்த பொருட்களை பார்வையிட தனி அறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
    Next Story
    ×