search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல்
    X
    கொடைக்கானல்

    கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    கொடைக்கானலில் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும் , மின் கம்பங்கள் சாய்ந்தும் பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் துண்டிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. பல கிராமங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    மலைச்சாலைகளில் பாறைகள் உருண்டும் மண் சரிவு ஏற்பட்டும் பாதிக்கப் பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று பகல் பொழுதில் மழை ஓய்ந்தது. இரவு நேரத்திலும் மழை குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கன மழை காரணமாக சுற்றுலா இடங்களை பார்வையிட வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தமிழகத்தில் மிரட்டி வந்த மகா புயல் அரபிக்கடல் நோக்கி செல்வதால் கொடைக்கானலுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

    இதனால் இன்று காலை முதல் சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதனிடையே மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னையில் இருந்து 46 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் கொடைக்கானல் வந்தனர். அவர்கள் கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்வார்கள். மழையின் தாக்கம் குறையும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×