search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    மு.க.ஸ்டாலின் தேவையற்ற விமர்சனம் செய்வதா?- அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம்

    ஆழ்குழாயில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே மு.க.ஸ்டாலினுக்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
    மதுரை:

    மதுரை தத்தனேரி பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் பங்கேற்று புதிய மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 41 மையங்கள் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 25 மையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த மையத்தில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மதுரை தூய்மையான நகரமாகவும், குப்பைத் தொட்டியில்லா நகரமாகவும் மாற்றப்படும். மதுரையை வளர்ச்சிமிக்க ஒரு மாநகராகவும், வரலாற்று சிறப்புமிக்க மாநகராகவும், தொன்மையும் பழமையும் சேர்ந்த புதுமையான நகரை உருவாக்கவும் அ.தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஏற்கனவே மாநகராட்சியின் வெள்ளைக்கல் பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் அந்தந்த பகுதியிலேயே குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிப்பதற்கு இந்த புதிய உரம் தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    முக்கியமான திருவிழா காலங்களில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சேரும் குப்பைகளை கொண்டு செல்வதற்கு ஏற்படும் காலவிரயத்தை தவிர்க்கும் பொருட்டு அருகில் உள்ள பகுதியிலேயே இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மதுரை மாநகராட்சி நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தில் உரங்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அதாவது ஒரு கிலோ ரூ.3-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம், பூங்கா உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தலாம். எனவே பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடர்ந்து வழங்கி வரும் அ.தி.மு.க. அரசுக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாயில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. ஆனால் அந்த குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை என்ற வேதனை முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்குமே உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு தற்போது குறைகூறி வருகிறார். அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வது எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு நல்லதல்ல. அரசின் நடவடிக்கையை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் (பொ) வினோத் ராஜா, உதவி ஆணையாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, உதவிப் பொறியாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×