search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டார் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
    X
    கோட்டார் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    குமரியில் இடி-மின்னலுடன் விடிய விடிய கனமழை

    குமரி மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகாவிலும் 3 வீடுகளும் இடிந்துள்ளது.
    நாகர்கோவில்:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டு இருந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கன்னியாகுமரியில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டிதீர்த்தது.

    இதனால் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் சாலைகளிலும், விவேகானந்தபுரம் சந்திப்பு, கன்னியாகுமரி பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இதனால் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி இருந்தனர். மழை சற்று குறைந்த பிறகே புறப்பட்டு சென்றனர். இரவும் அங்கு விட்டுவிட்டு மழை பெய்தது. மயிலாடியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது.

    மயிலாடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் இரவு விடிய விடிய மழை பெய்தது.

    நாகர்கோவிலிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    சிற்றார் அணை திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.60 அடியாக இருந்தது. அணைக்கு 1,141 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம்70.10 அடியாக உள்ளது. அணைக்கு 798 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வள்ளியாறு, பரளியாறு, பழையாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையின் காரணமாக ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.

    கட்டுமான தொழிலாளர்களும், செங்கல் சூளை தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகாவிலும் 3 வீடுகளும் இடிந்துள்ளது. தோவாளை தாலுகாவில் 2 மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

    சூறைக்காற்றிற்கு பூதப்பாண்டி, தக்கலை, பார்வதிபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19.6, பெருஞ்சாணி-12.2, சிற்றாறு-1-20.6, சிற்றாறு-2-13, மாம்பழத்துறையாறு-25, நாகர்கோவில்-35.8, பூதப்பாண்டி-30.2, சுருளோடு-23.6, கன்னிமார்- 31.2, ஆரல்வாய்மொழி-42, பாலமோர்-21.6, மயிலாடி-99.4, கொட்டாரம்- 61, இரணியல்-10.6, ஆணைக்கிடங்கு-29, குளச்சல்-14, குருந்தன்கோடு-20, அடையாமடை-13, கோழிப்போர்விளை-22, முள்ளங்கினாவிளை-23, புத்தன் அணை-11, திற்பரப்பு-26.



    Next Story
    ×