search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் - ஜிகே வாசன்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர் - ஜிகே வாசன்

    சுர்ஜித் மீட்பு பணியில் இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் உள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அவனை மீட்கும் பணிகள் 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

    ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை ஆய்வு பார்வையிட்டு வருகின்றனர்.




    இந்நிலையில், சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். மேலும், சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 'குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கவேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது. குழந்தையை மீட்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டாலும் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் போல எந்த மாநிலமும் செய்திருக்க முடியாது’ என தெரிவித்தார்.    

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ' மீட்பு பணிகள் நடைபெறும் பகுதி முழுவதும் கடினமான பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்புப்பணிகள் மிகவும் சவாலாக உள்ளது. ரிக் இயந்திரம் மூலம் இந்நேரம் 90 அடிகள் தோண்டியிருக்க வேண்டும் ஆனால் பாறைகள் மிகமிக கடினமாக இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.

    எனவே, மாற்றுத்திட்டம் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’ என்றார்.

    Next Story
    ×