search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்சப்பணம் சிக்கியது
    X
    லஞ்சப்பணம் சிக்கியது

    கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ரூ.45 ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியது

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச பணத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கிய சம்பவம் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் மோகன்பாபு(42). இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் பணம் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு தீபாவளி வசூல் பணத்தை அரசு வாகனத்தில் கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய அவர் லஞ்ச பணத்தை எடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த காரில் வைத்து கொண்டிருந்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக அவரை பிடித்தனர். அவரிடமிருந்து லஞ்ச பணம் ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச பணத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கிய சம்பவம் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்கா எதிரே வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகமும் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் உர விற்பனையாளர்களிடம் இருந்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளவர்கள் ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என லஞ்சம் பெற்றுள்ளதாக ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ஊட்டி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மாலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.67 ஆயிரத்து 803-யை கைப்பற்றி சென்றனர். மேலும் இதுகுறித்து உதவி இயக்குனர் சிவக்குமார், நிர்வாக இயக்குனர் சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×