search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் மெயின் அருவி
    X
    ஒகேனக்கல் மெயின் அருவி

    நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று மாலை 6 மணிக்கே கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 25 ஆயிரத்து 381 கனஅடி தண்ணீரும், கபிணி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இது தவிர காவிரி ஆறு வரும் பாதைகளில் மழை பெய்து வருவதால் அந்த மழை நீரும் காவிரி ஆற்றில் கலந்து தமிழகத்திற்கு வருகிறது.

    இந்த நிலையில் மத்திய ஜலசக்தி கமி‌ஷன் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. 45 ஆயிரம் கனஅடி முதல் 50 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிக்கு வெளியேற்றுமாறு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இரவில் 33 ஆயிரம் கனஅடியை தொட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்றும், கரையில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    மேலும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை போலீசார் பூட்டி வைத்து உள்ளனர். தொடர்ந்து ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளதால் தீயணைப்பு படையினர் படகு மற்றும் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
    Next Story
    ×