search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் பாலம் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் காவிரியில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகள் மீண்டும் நிரம்பி உள்ளன. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் 40 ஆயிரம் கன அடிக்கும் மேல் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதே போல தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து காவிரி வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது.

    ஒகேனேக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்றிரவு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை நேற்று 3-வது முறையாக நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 47 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் பாலம் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் காவிரியில் 45 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் டெல்டா மாவட்ட பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விட வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×