search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.206½ கோடி தீபாவளி போனஸ்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

    தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க ரூ.206 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்துத் துறையை சேர்ந்த 1,36,619 தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கென்று ரூ.206 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் தொகை வழங்கப்படவுள்ளது. 20 சதவீத போனஸ் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களிலும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு நாளை முதல் தீபாவளி முன்பணம் வழங்கப்படும். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு சேர்த்து சுமார் 21,586 பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

    மேலும், குறைந்த தூரம் செல்லக்கூடிய மூன்று மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களை முதல்-அமைச்சர் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். தற்போது கூடுதலாக பஸ்களுக்கு கூண்டு கட்டும் பணி முடிவடைந்தவுடன் அந்த அந்த போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட உள்ளது.

    விரைவு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்பட்டு வந்த குளிர்சாதன பஸ்சானது அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்கள் இயக்கப்படவுள்ளது. பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்சாதன பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. கூண்டு கட்டும் பணி முடிவடைந்ததும், தமிழகத்தில் மொத்தம் 150 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும்.

    இதில் சென்னை மாநகரத்தில் 50 குளிர்சாதன பேருந்துகள் (ரெட் பஸ்கள்)இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×