search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.ம.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் வீட்டில் பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடப்பதை காணலாம்.
    X
    அ.ம.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் வீட்டில் பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடப்பதை காணலாம்.

    அமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பிரமுகர் மற்றும் வியாபாரி வீட்டில் இருந்து 129 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது40). அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

    இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதனை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

    அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பீரோவையும் திறந்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    நேற்று இரவு வீடு திரும்பிய சந்தோஷ்குமார் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளன.

    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 85 பவுன் நகைகள் மற்றும் ரூ.5½ லட்சம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிப்பவர் முருகன். நெல் வியாபாரியான இவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். நேற்று அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வீடு முழுவதும் துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் பீரோவில் இருந்த 44 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் முருகன் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கிருஷ்ணன்கோவிலில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவங்கள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக பெண்கள் வீடுகளில் தனியாக இருக்க மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால் ஒரே கும்பல்தான் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×