search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையன் சுரேசுக்கு போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து வந்த காட்சி.
    X
    கொள்ளையன் சுரேசுக்கு போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து வந்த காட்சி.

    திருச்சி நகைக்கடையில் திருடிய மேலும் 1½ கிலோ தங்க நகைகள் மீட்பு

    திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்து கல்லணை அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 1½ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படையினர் விசாரணை நடத்தி, கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34), கனகவள்ளி (57) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்தது திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுரேஷ், கணேசன் என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், முருகன் பெங்களூர் கோர்ட்டிலும், சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு போலீசில் முருகன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அவனை திருச்சி அழைத்து வந்த போலீசார் திருவெறும்பூர் பூசத்துறை காவிரி ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த ரூ.4.30 கோடி மதிப்பிலான 12 கிலோ லலிதா ஜூவல்லரி நகைகளை மீட்டனர். கணேசனிடமிருந்து ரூ.2.30 கோடி மதிப்பிலான 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து கணேசனை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சுரேஷிடம், காவலில் நடத்திய விசாரணை மூலம், கல்லணை பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.68 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 499 கிராம் தங்கத்தை போலீசார் நேற்று மீட்டனர். மேலும் திருச்சி மணிகண்டம் அருகே திருட்டுக்கு பயன்படுத்தி மறைத்து வைத்திருந்த 3 கையுறை, 1 கடப்பாரை, 1 திருப்புளி ஆகியவற்றையும், திருவண்ணாமலையில் வேன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அந்த நகைகள் இன்று திருச்சி கோர்ட்டில் ஒப்படைக்கப்படுகிறது.

    சுரேசுக்கு 7 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவரை போலீசார் திருச்சி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்ப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸ் காவலில் எடுக்க திருச்சி மாநகர போலீசார், பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

    லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் இதுவரை 24 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 4 கிலோ நகைகளை எங்கு பதுக்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நகைகளை எங்காவது மண்ணில் புதைத்து வைத்துள்ளனரா? அல்லது நகைகளை உருக்கி விற்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இது பற்றிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளை குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×