search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் ரோட்டில் தண்ணீர் ஆறு போல் ஓடுவதையும், அதில் தத்தளித்து செல்லும் வாகனங்களையும் படத்தில் காணலாம்.
    X
    சேலம் ரோட்டில் தண்ணீர் ஆறு போல் ஓடுவதையும், அதில் தத்தளித்து செல்லும் வாகனங்களையும் படத்தில் காணலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை- தரைபாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை நீடித்த பலத்த மழை காரணமாக மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. நல்லிப்பாளையம், முதலிப்பாளையம், புதுச்சத்திரம் போன்ற இடங்களிலும் நேற்று இரவு மழை பெய்தது. இதனால் ஆடுகள், கோழிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைபோல் பரமத்திவேலூர், மோகனூர், கந்தம் பாளையம், ஜேடர்பாளையம், வேலூர், சோழசிராமணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இப்பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. 6 மணிக்குப் பிறகு லேசாக மழை தூறிக்கொண்டே உள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    பரமத்திவேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள். விடிய, விடிய பெய்த மழையினால் காவிரி ஆற்றுப்பாசன நீரோடைகளில் அதிக அளவில் தண்ணீர் பாய்கின்றன. விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மோகனூர் பகுதியில் ஒரு சில வாழை தோட்டங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து, குளம் போல் காட்சியளிக்கிறது. பாண்டமங்கலம் பகுதியை அடுத்த முனியகவுண்டம்பாளையம் அருகே தார்சாலையில் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை ஓரத்தை பெயர்த்து பொதுமக்கள், சாலையில் தேங்கிய மழை தண்ணீரை வெளியேற்றினர்.

    ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையில் லேசாக தூறியபடி இருந்தது. மழை காரணமாக வெண்ணந்தூர் அருகே உள்ள மதியம்பட்டி தரைப்பாலம் திருமணி முத்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தரைப்பாலம் உடைந்ததால், அந்த பகுதியில் உள்ள 5 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

    திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம், விட்டம் பாளையம், துவக்கவாடி, பால்மடை, மோர்பாளையம், சித்தாளந்தூர், கந்தம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணியில் இருந்து, 9 மணி வரை நல்ல மழை பெய்தது. இந்த மழை வெள்ளம் திருச்செங்கோடு நகரில் உள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்தனர்.

    இப்பகுதிகளில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து மழை தூறியபடி உள்ளது. திருச்செங்கோட்டில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மழையால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுபோல் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு லேசான மழை பெய்தது.

    கொல்லிமலை, கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, நடுகோம்பை, சேந்தமங்கலம், முத்துகாப்பட்டி, பேளூக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இரவு பெய்ய தொடங்கிய இந்த மழை இன்று காலையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொட்டிய மழை விபரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

    குமாரபாளையம்-3.60
    நாமக்கல்-24
    ராசிபுரம்-18.20
    திருச்செங்கோடு-46.8
    கலெக்டர் அலுவலகம்- 19.50
    கொல்லிமலை-12.
    Next Story
    ×