search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’

    கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) பரவலாக மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து இந்திய வானிலை துறை தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்தமிழகம் மற்றும் குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இருக்கிறது.

    இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

    கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளுக்கு நாளை(அதாவது இன்று) மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரக் கூடும். 22-ந்தேதியன்று (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. அதில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ‘ரெட் அலர்ட்’ என பதிவு செய்து இருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என். புவியரசன் கூறியதாவது:-

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திலும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ‘ரெட் அலர்ட்’ விடுக்கும். இப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதும் அதுபோன்ற அறிவிப்பு தான்.

    தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் இந்த ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

    குழித்துறை 14 செ.மீ., பெரியநாயக்கன்பாளையம் 12 செ.மீ., கீழ் கோதையாறு, மேட்டுப்பாளையம் தலா 9 செ.மீ., குலசேகரப்பட்டினம் 8 செ.மீ., வால்பாறை, மயிலாடி, அரவக்குறிச்சி, தூத்துக்குடி தலா 7 செ.மீ., தக்கலை, சென்னை விமானநிலையம், தென்காசி, கோத்தகிரி, பொள்ளாச்சி, குளச்சல் தலா 6 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

    Next Story
    ×