search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நிலவரம்
    X
    மழை நிலவரம்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் - டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 1 வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் அனேக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் விட்டிருந்த மழை மீண்டும் இரவில் அவ்வப்போது பெய்தது. இன்று காலையில் இருந்து வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் இருந்தே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குடைபடித்தபடியும், ரெயின்கோட் அணிந்தும் சென்றனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கிடையே வாகனங்களை ஓட்டி சென்றனர். பஸ், கார்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே மெதுவாக ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

    பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே போல் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வல்லம், குருங்குளம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாகை மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், வேதாரண்யம், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் தற்காலிகமாக தெருவிளக்கு பராமரிக்கும் பணி செய்து வந்தவர் பாலமுருகன் (வயது 28). இவர் அண்டகத்துரை பகுதியில் மின்கம்பத்தில் ஏறி தெருவிளக்கு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஏற்கனவே பெய்த மழை காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விட்டு விட்டு பெய்த மழை இன்று காலையும் தொடர்கிறது. வானத்தில் கருமேகங்கள் சூழந்து பகலை இருளாக்கும் வண்ணம் இருப்பதால் மதியத்துக்கு பிறகு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×