search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கமல் நவம்பர் 7-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்

    2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7-ந்தேதி முதல் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.

    அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப் புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    அகில இந்திய அளவில் தேர்தல் வியூகத்துக்கு பெயர் பெற்றவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கவும் கடந்த மே மாதம் நடந்த ஆந்திர தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்கவும் திட்டமிட்டு கொடுத்தவர்.

    தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இவரை பயன்படுத்திக்கொள்ள முக்கிய கட்சிகள் அணுகின. கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். மற்ற கட்சிகளை புறக்கணித்து விட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து முதல் கட்ட ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கினார். அவரது ஆலோசனைப்படி கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    கமல் வரும் நவம்பர் 7-ந்தேதி 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.

    இது குறித்து கமல் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:-

    1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரை உலகில் அவருக்கு இது 60-வது வருடம். இதனால் சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்பட உள்ளது. பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது.

    இதன் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் திறன் சார்ந்தும் உடல் சார்ந்தும் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த பிறந்தநாள் விழாவிலேயே கமல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ள கமல்ஹாசன் அதற்கு தயாராகும் விதமாக இப்போதே பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை கவர திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள்.

    இந்நிலையில் பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை கமல் நீட்டிக்க விரும்பவில்லை என்ற தகவல்கள் வருகின்றன. கமல் கட்சிக்காக பணியாற்றுவதாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர் அதற்கான பணிகளையும் தொடங்கினார்.

    200-க்கு மேற்பட்ட இளைஞர்களை கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு அதில் கிடைத்த விபரங்கள் மூலம் பணிகளை தொடர்ந்து வருகிறார்.

    இதற்கிடையே அவர் அ.தி.மு.க மற்றும் ரஜினியுடனும் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது கமலுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் அரசியல் உலகில் பிரபலமாக இருந்த, இருக்கும் நபர்களை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    கமல்ஹாசன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய கட்சியில், அணி மாறும் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்கிறார். மக்களுக்காக உழைத்த நேர்மையான அரசியல்வாதிகள் வந்தால் சேர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    பிரசாந்த் கிஷோரோ மக்களிடம் பிரபலமாக உள்ள தலைவர்களை இழுக்க அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லை.

    பிரசாந்த் கிஷோருடன் கமல் போட்டுள்ள ஒப்பந்தம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. ஜனவரிக்கு பிறகு கமல் விரும்பினால் நீட்டித்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நீட்டிக்க மாட்டார் என்ற தகவல் வருகிறது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் கூறியதாவது:-

    இது முழுக்க கட்சியின் உள்ளே நடக்கும் விவகாரம். ரகசியமாக நடைபெறும் ஆலோசனைகளை வெளியில் சொல்ல முடியாது. ஜனவரி மாதம் ஒப்பந்தம் முடியும்போதுதான் எதையும் கூற முடியும்.

    பிற கட்சிகளுடன் பிரசாந்த் பேசியது தவறு இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள், ஆலோசனைகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×