search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாமணி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
    X
    சிந்தாமணி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    பா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

    கவர்னரிடம் ஊழல் புகார் பட்டியல் கொடுத்த பா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்? என்று விக்கிரவாண்டி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

    ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழையகருவாச்சி, டி.புதுப்பாளையம், மேலகொந்தை, பனையபுரம், தொரவி, வாக்கூர், ராதாபுரம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து நான் பேசுவதன் காரணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்து விட்டது. அவர் திடீரென, ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், நானும் தான் காரணம் என்கிறார். நான் தான் காரணமா?, அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்களா?, உங்களோடு இருக்கிற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னார்.

    அவரை சமாதானப்படுத்தி, விசாரணை ஆணையம் அமைத்தீர்கள். நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் 5 முறைக்கு மேல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் போகவில்லை. இந்த நிலையில் நாங்கள் தான் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார்.

    தைரியம் இருந்தால் என்மீது வழக்கு போட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்துங்கள். யார் குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறார்கள் என்பதை பார்க்க தான் போகிறோம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

    அதற்கு காரணமானவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்டு பிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவோம்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பொய் பேசி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போன காரணத்தால்தான் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது.

    இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தாமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம், அவர்கள் தான் வழக்கு போட்டது என்று எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பொய் பேசி இருக்கிறார்.

    தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றோம். தி.மு.க.வை சேர்ந்த ஆலந்தூர் பாரதி, தேர்தலை முறையாக நடத்த வேண்டும், மலைவாழ் மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று முறையாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை சரி செய்து உள்ளபடி நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்துக்கு சென்றோம்.

    இதில் 2 முறை அதை சரி செய்து நீதிமன்றம் தேதியை நிர்ணயம் செய்து, உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி 2016-ம் ஆண்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். மேலும் 31-12-2016-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் தேர்தல் நடத்த முன்வராமல் வேண்டுமென்றே, திட்டமிட்டு தள்ளி வைத்து செல்கிறார்கள். விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வர உள்ளது, வந்தவுடன் தேர்தலை நடத்துவோம்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள் யார் என்றால், ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்தவர்கள், பழிவாங்கி கொண்டு இருப்பவர்கள் தான். அவர்களுடன் பா.ம.க. எப்படி ஒட்டி உறவாடி கொண்டு இருக்கிறது என்று தெரியும். அவர்களுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை என்பதை அவர்கள் மறந்து விட மாட்டார்கள். பா.ம.க.வினர் நம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

    ஆனால் 2015-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மிகப்பெரிய ஊழல் பட்டியலை தயார் செய்து அப்போது கவர்னராக இருந்த ரோசய்யாவிடம் கொடுத்தனர். அதில் 18 ஊழல்களை வரிசைப்படுத்தி சொல்லியிருந்தனர். கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்த பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்?

    122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆட்சியில் இருக்க 117 பேர் தேவை. தற்போது 5 பேர் தான் கூடுதலாக உள்ளீர்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஓட்டு அளித்ததால், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது.

    எனவே அதில் 11 பேரை கழித்தால் மெஜாரிட்டி இருக்குமா?. வர இருக்கிற தேர்தலில் நிச்சயமாக தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையப்போவது உறுதி. அப்படி அமைவதற்கு இந்த தேர்தல் தான் முன்னோட்டமாக அமைய இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×