search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    திசையன்விளை பள்ளி மாணவி படுகொலை

    திசையன்விளையில் 7-ம் வகுப்பு மாணவியை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள உவரி கூட்டப்பனையைச் சேர்ந்தவர் வினிஸ்டன். இவருடைய மனைவி வினிதா. இவர்களுடைய மகள் இளவரசி (வயது 12). இவள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று இளவரசி பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தாள்.

    பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றாள். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடினார்கள். ஆனால், அவளை கண்டுபிடிக்கமுடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வினிஸ்டன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் பகுதியில் இளவரசி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தாள். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், உவரி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையில் குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி கடற்கரை பகுதியை நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் உள்ளன. இதனால் அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு, உடலை பக்கத்து வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கூட்டப்பனை பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் பின்னர் 2 பேரையும் விடுவித்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அந்த அறிக்கையில் சிறுமி வலிப்பு நோய் காரணமாக இறந்தது என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் கிராம மக்கள் சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் உள்ளதால் கண்டிப்பாக யாரோ கொலை செய்துள்ளனர்.

    ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் தப்பிக்க வைக்க நினைக்கிறார்கள். எனவே அப்பகுதி கிராம மக்கள் போலீசாரை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×