search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரி நீர்மட்டம் 27 அடியாக உயர்வு

    கடந்த மாதம் 18ந் தேதி 12.25 அடியாக இருந்த பூண்டி ஏரி நீர்மட்டம் நேற்று 27.25 அடியாக உயர்ந்தது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கோடை வெயில் காரணமாக நீரின்றி குட்டை போல் காணப்பட்டது.

    கடந்த மாதம் 18-ந்தேதி இரவு பெய்த மழைக்கு பிறகு ஏரியின் நீர்மட்டம் 12.25 அடியாக பதிவானது. பலத்த மழையால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வரும் தருணத்தில் கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 800 கனஅடியாக வந்து சேர்ந்தது.

    பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்தால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி, புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் 11-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 642 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

    நேற்று முன் தினம் இரவு பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு வினாடிக்கு 192 கனஅடி வீதம் மழை நீர் வந்து கொண்டிருந்தது. ஆக மொத்தம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 834 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் 18ந் தேதி 12.25 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 27.25 அடியாக உயர்ந்தது. அதாவது 29 நாட்களில் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது.

    பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 28-ந் தேதி முதல் இன்று காலை வரை 20 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லைக்கு 1.2 டிஎம்சி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    கிருஷ்ணா நதி நீர்வரத்து மற்றும் வடகிழக்கு பருவமழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரி சில நாட்களில் முழு கொள்ளளவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×