search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தும்பூர் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.
    X
    தும்பூர் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.

    ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு

    ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் சென்று அவர், பொதுமக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்களது ஆட்சியில் என்ன என்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு உண்மையாகவும், நேர்மையாகவும் தெரிவித்து வருகிறோம். ஆனால் நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது நானும், அமைச்சர்களும் பொய் சொல்வதாக கூறி இருக்கிறார். நாங்கள் புள்ளி விவரத்தோடு தான் பேசுகிறோம். எனவே பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்லக்கூடாது. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள், அதற்கு பதில் சொல்கிறோம். தமிழகத்தில் சாலை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

    ‘நீட்’ தேர்வை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்கிறார். 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அதில் தி.மு.க.வை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் தான் ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தார்கள். ஆகவே இந்த தேர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் காரணம்.

    அதன் பிறகு ‘நீட்’ தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது ஜெயலலிதாவின் அரசு ஆகும். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், அதுவும் நிலுவையில் உள்ளது. இன்று வரையில் ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆகும். ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க. தான். இதை பச்சை பொய் பேசி வரும் மு.க.ஸ்டாலின் மறுக்க முடியுமா?.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா மரணம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பேசி வருகிறார். தி.மு.க.வினர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதில் விடுதலையாகி வெளியே வந்த நிலையில், அதை பொறுக்க முடியாமல், ஜெயலலிதாவை பழிவாங்கவும், அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று நினைத்தும் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.வினர் மேல் முறையீடு செய்தார்கள். இவ்வாறு அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததாலும், சிறைக்கு சென்றதாலும் தான் உரிய முறையில் ஜெயலலிதாவால் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதன் மூலம் ஜெயலலிதாவின் இறப்புக்கு கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம். எனவே அவரது இறப்பு பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நான் பகிரங்கமாக சொல்கிறேன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு முழுக்க முழுக்க காரணம் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் மு.கஸ்டாலின் தான்.

    ஆடு நனையுதேனு ஓநாய் கவலைப்பட்டதாம் என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பேசிவருகிறார். அவரது இறப்பு குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்த அரசு அ.தி.மு.க. அரசு தான். மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இப்படி அவர் பேசி வருகிறார்.

    கடந்த முறை 38 எம்.பி.க்கள் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எங்களை பார்த்து மு.க.ஸ்டாலின் கேட்டார். இப்போது உங்களுக்கு 38 பேர் இருக்கிறார்களே, நீங்கள் என்ன செய்கிறீர்கள். அவர்கள் அங்கு பெஞ்சை தான் தேய்க்கிறார்கள். மக்களிடம் பொய் பேசுவதற்கு தண்டனையாக தான் ஜெயித்தும் பயனில்லாமல் இருக்கிறீர்கள்.

    உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. தான் நடத்தவில்லை என்று பேசுகிறார். யார் நடத்தவில்லை?. நாங்கள் 26-09-2016 அன்று தேர்தல் அறிவிப்பு கொடுத்து அதற்கான பணிகள் தொடங்கியது. வேட்பு மனுக்களும் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் இப்போது தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறாது என்று நினைத்து, பழங்குடியினருக்கு சரியான இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தேர்தலை நடத்தவிடாமல் நிறுத்திவிட்டனர்.

    வேட்பு மனுக்கள் வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் இப்படி சாக்குபோக்கு சொல்லி நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே உங்களால் தான் நிறுத்தப்பட்டது, எங்களால் அல்ல. தற்போது இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தான் காலதாமதம் ஏற்பட்டது. இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது. எனவே டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, அனைவரும் பதவி ஏற்பார்கள்.

    இனி உங்களது பொய் செல்லுபடியாகாது. இவரது பொய்யால் ஏமாந்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக உள்ளனர். பொய்யிலேயே பிறந்து, வளர்ந்து இருக்கிற கட்சி தி.மு.க. தான். எனவே உஷாராக இருக்க வேண்டும். நாங்கள் எதை செய்வமோ அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பேசுபவர் தான் மு.க.ஸ்டாலின்.

    தற்போது இவர் தரம் இல்லாமல் பேசி வருகிறார். தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதி இல்லாமல் ஏதேதோ பேசி வருகிறார். தோல்வி பயத்தின் விளிம்புக்கு போய்விட்டார். அதனால் தான் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

    நமக்கு நாமே திட்டம் போட்டு ஊர் முழுவதும் சென்ற விஞ்ஞான விவசாயி தான் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். நான், டாக்டர் ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பொய் பேசுகிறோம் என்கிறார். மக்களுக்காக பணிபுரிகிற மிகப்பெரிய கூட்டணி எங்களது கூட்டணியாகும்.

    பாராளுமன்ற தேர்தலின் போது கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தி.மு.க.வினர் 40 கோடி ரூபாய் பணம் கொடுத்தது வெளிவந்துள்ளது. ஒரு கட்சி வாங்கிய நிதியை மற்ற கட்சி வாங்கினால் அது தவறு ஆகும். இது தொடர்பாக சில பேர் நீதிமன்றத்துக்கு செல்ல இருப்பதாக கூறுகிறார்கள்.

    கம்யூனிஸ்டு கட்சியினர் நேர்மையாளர்கள் மாதிரி பேசுவார்கள். இனி அவர்கள் பேசுவதற்கு தகுதியில்லை. ஏதோ இவர்கள் தான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் அவர்களது முகமூடியை கிழித்த பெருமை மு.க.ஸ்டாலினையே சேரும். கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.40 கோடி என்றால், இவரது கட்சி வேட்பாளருக்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்.

    எங்களிடம் தற்போது 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் வெற்றி பெற்று 124 பேராக உயரப் போகிறோம். பெருபான்மை எம்.எல்.ஏ.க்களுடன் தான் நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். மைனாரிட்டி ஆட்சி செய்த நீங்கள் தான், மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தீர்கள். ஆகையால் எங்களை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை. நீங்களும், உங்களது குடும்பத்தினரும் தான் நாட்டை எப்படியாவது ஆள வேண்டும் என்கிற வெறித்தன்மை கொண்டு இருக்கிறீர்கள். காலத்துக்கு ஏற்ப மாறும் கட்சி தி.மு.க. ஆகும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×