search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    டெங்கு நோய் பாதிப்பு- தனியார் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது

    டெங்கு நோய் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை, புறநகர் பகுதியில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள், சிறிய நர்சிங்ஹோம்கள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு தீவிரமாகி வருகிறது.

    தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 3,400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகளவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் 1000-க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தனியார் மருத்துவமனைகளில் அதைவிட நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள், சிறிய நர்சிங்ஹோம்கள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. சிறு குழந்தைகள் காய்ச்சலால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது பெய்யும் மழையாலும், கொசுக்கள் உற்பத்தியாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க இடம் இல்லாமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    சென்னையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறியுடன் வந்த சிறுவர்களை சேர்க்க படுக்கை (‘பெட்’) இல்லாததால் திருப்பி அனுப்பி விட்டனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு ரத்த பரிசோதனை செய்து சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் ‘பெட்’ கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு வரும் நோயாளிகளை அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்கின்ற நிலையும் காணப்படுகிறது.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சிகாம கோடி குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவர்களை சேர்க்க இடம் இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றி வருகின்றனர். இதுகுறித்து அம்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவமனையில் குழந்தைகள் முழுமையாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் தொடர்ந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் வருவதால் மிகவும் கவனத்துடன் கையாள்கிறோம் என்றார். கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனைக்கு குழந்தைகள் அதிகம் வருவதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

    தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகள் எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறியுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவலை தினமும் சுகாதாரத்துறைக்கு தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டெங்கு குறித்த ரத்த பரிசோதனை முடிவினை முறையாக நோயாளிகளின் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் எனவும், அலட்சியமாக இந்த வி‌ஷயத்தில் இருக்கக்கூடாது என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிகளவு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×