search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பட்டேல் பிறந்தநாளில் தமிழக பா.ஜனதா தொண்டர்கள் வேட்டி-சட்டை அணிய வேண்டும்: உயர்மட்டகுழு தீர்மானம்

    வல்லபாய் படேல் பிறந்த நாளில் நடத்தப்படும் ஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை மற்றும் துண்டுடன் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள், தொண்டகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்த போது தமிழர் பாரம்பரிய கலாச்சாரமான வேட்டி-சட்டை அணிந்திருந்தார். இது தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

    இதை மையமாக வைத்து மக்கள் மத்தியில் பிரசாரத்தை தீவிரப்படுத்த தமிழக பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக கட்சியின் பொது செயலாளர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் இன்று தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

    “மகாத்மா காந்தியின் 150-வது பாதயாத்திரை” மாநிலம் முழுவதும் உற்சாகத்துடன் நடத்தப்பட்டு வருகின்றது. கதர் ஆடை, தூய்மை பாரதம், தீண்டாமை ஒழிப்பு போன்ற காந்திய சிந்தனைகளை மக்கள் புதிய எழுச்சியோடும், உற்சாகத்துடனும் வரவேற்று பங்கு பெறுவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 138 சட்டமன்ற தொகுதிகளில் பாதயாத்திரை நடைபெற்றுள்ளது.

    கட்சியின் அமைப்பு தேர்தல்களில் கருத்து சொல்லவும், பங்கு பெற்று புதிய பொறுப்புகள் பெறுவதற்கும் தீவிர உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 51 மாவட்டங்களாக இருந்த கட்சியின் அமைப்பு மாவட்டங்கள் 60 மாவட்டங்களாக உயர்த்தப்படுகிறது.

    சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த இந்திய பிரதமர்-சீன அதிபர் சந்திப்பு கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கும் கொடுத்த முக்கியத்துவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் வரும் 31-ந் தேதி மாவட்டம் தோறும் வல்லபாய் படேல் பிறந்த நாளில் நடத்தப்படும் ஒற்றுமை யாத்திரையில் தமிழர் பண்பாடு உடையான வேட்டி, சட்டை மற்றும் துண்டுடன் கலந்து கொள்ள கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×