search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் ஆறாக ஓடிய மழைவெள்ளம்.
    X
    திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் ஆறாக ஓடிய மழைவெள்ளம்.

    விடிய, விடிய பலத்த மழை- ஊட்டியில் பல இடங்களில் மண் சரிவு

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை தொடர்ந்து நீடித்தது. இரவிலும் மழை தொடர்ந்தது. திருப்பூரில் அதிகாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது.

    திருப்பூர் ராயபுரம், கல்லாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் கொட்டி தீர்த்தது.

    மாவட்டம் முழுவதும் இதே போல் மழை பெய்தது. அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், மூலனூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை தொடர்ந்து நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வெள்ளகோவிலில் அதிக பட்சமாக ஒரே நாளில் 61 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    திருப்பூர் வடக்கு-15, அவினாசி-6.40, பல்லடம்-37, ஊத்துக்குளி-24, காங்கயம்-36, தாராபுரம்-15, மூலனூர்-30, திருப்பூர் தெற்கு-23, வெள்ளகோவில்-61, திருமூர்த்தி அணை-6, அமராவதி அணை -4.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர்,குன்னூர், அவலாஞ்சி, குந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மஞ்சூர் பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    இதில் குந்தா பாலம் பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதே போல் மெரிலேண்ட் அருகே அத்திமரம் என்ற இடத்திலும் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலைகளை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டு மண் சரிவுகள் அகற்றப்பட்டது. மண் சரிவு காரணமாக மஞ்சூர்- ஊட்டி சாலையில் இன்று காலை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதே போல் நேற்று இரவு பெய்த மழை காரணமாக கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

    ஊட்டியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை காரணமாக கடும் பனி நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    ஊட்டி-15.2, நடுவட்டம்-4, கல்லட்டி-5, கிளன்மார்கன்-7, குந்தா-48, அவலாஞ்சி-38, எமரால்டு-31, கெத்தை- 34, கிண்ணகொரை-33, அப்பர் பவானி-28, குன்னூர்-47, கேத்தி-56, பர்லியாறு-42, கோத்தகிரி-42, கொடநாடு-18, கூடலூர்-3, தேவாலா-6.

    கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது. பொள்ளாச்சியில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. வால்பாறையில் லேசான சாரல் மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    அன்னூர்-12, விமான நிலையம்-15.6, மேட்டுப்பாளையம்-52, சின்கோனா-9, சின்னக்கல்லார்-16, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்-8, வால்பாறை தாலுகா-7, சோலையார்-11, ஆழியாறு-2.4, சூலூர்-5, பொள்ளாச்சி-25, கோவை தெற்கு-15, பி.என். பாளையம்-7, வேளாண்மை பல்கலைக் கழகம்-23.
    Next Story
    ×