search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 594 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 ஆயிரத்து 347 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    இதனால் 2 அணைகளில் இருந்தும் நேற்றிரவு முதல் 24 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்வதால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    நேற்று 6 ஆயிரத்து 594 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 347 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக நேற்று காலை 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மதியம் 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் மாலை முதல் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும், நீர் திறப்பும் சமமாக இருப்பதால் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது.

    நேற்று 113.06 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 113.03 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×