search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காயம் அடைந்தவர்களை கொண்டுவர 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு லஞ்சம் கொடுத்த தனியார் ஆஸ்பத்திரி

    விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை கொண்டுவர 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு லஞ்சம் கொடுத்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்பட்டது.
    சென்னை:

    ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

    இதன் மூலம் புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்கள், விபத்து மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விபத்தில் சிக்கி காயம் அடைபவர்கள் அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை, தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விபத்தில் படுகாயம் அடைபவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்காமல் பெரும்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குளோபல் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக புகார்கள் வந்தன.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    அப்போது முதல்-அமைச்சரின் காப்பீடு தொகை பெறுவதற்காக விபத்தில் சிக்கியவர்களை குளோபல் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்க்க அதன் நிர்வாகம் 108 ஆம்புலன்சு டிரைவர்கள் மற்றும் அதில் பணிபுரியும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு சேவையை தவறாக பயன்படுத்தியதாக தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து குளோபல் ஆஸ்பத்திரி தற்காலிகமாக ரத்து (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 108 ஆம்புலன்சு சேவையில் பணியாற்றிய 19 பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் ஒப்பந்த ஊழியர்கள், 9 பேர் பகுதி நேர ஊழியர்கள்.

    இவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீதும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் மீண்டும் பணி நியமனம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்துக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் படுகாயம் அடைபவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொண்டு சென்று சேர்ப்பது நடைமுறையில் உள்ளது.

    ஆனால் சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பணத்துக்கு ஆசைப்பட்டு விபத்தில் சிக்குபவர்களை குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்து லஞ்சம் பெற்று வந்தனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி ஊழியரும், 108 ஆம்புலன்சு டிரைவரும் பேசிய செல்போன் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பிரச்சினையில் சிக்கிய குளோபல் ஆஸ்பத்திரியில் இருந்து அதிக ஊழியர்கள் விலகி வேறு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் அங்கு நடைபெற்ற தவறுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    Next Story
    ×