search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவேம்பு கசாயம்
    X
    நிலவேம்பு கசாயம்

    பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் - மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவு

    டெங்கு காய்ச்சல் எதிரோலியா பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் பருவமழைக்காலங்களில் மேற்கொள்ளப்படும் காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவாவண்ணம் நடவடிக்கையினை துரிதப்படுத்த அனைத்து அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

    மேலும் டெங்கு நோய் பாதித்த பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுப்புழு வளர ஏதுவான திறந்த நிலையிலுள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றில் கொசுப்புழு வளரா வண்ணம் திடக்கழிவு மேலாண்மை துறை மற்றும் பொறியியல் துறையின் மூலம் இணைந்து கூட்டுப்பணி மேற்கொள்ள வேண்டும்.

    கொசுப்புழு கண்ட இடங்களில் விதிக்கப்படும் அபராத பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களான இரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாணவர்கள் கூடும் இடங்களான அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் கொசுக்கொல்லி புகை பரப்பும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளரும் இடங்களின் விவரங்களை பணியாளர்களை கொண்டு சேகரித்து கொசுப்புழு வளரா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளரும் இடங்களில் பணியாளர்கள் சிறப்புடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனரா என ஆய்வு மேற்கொண்டு, குறைபாடு இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு 15 மி.லி. அளவிலும், 10 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு 30 மி.லி. அளவிலும், தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இதனை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடை முறைப்படுத்த வேண்டும் என்று ஆணையாளர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை அபராதத் தொகையாக ரூ.38,96,600 விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 8929 புதிய கட்டுமானப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 387 அரசு/பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் 652 தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து கொசுப்புழு வளராதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 1,737 அரசுக்கட்டிடங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு வளராமல் தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மண்டல வாரியாக 5,520 பூட்டிக்கிடக்கும் வீடுகளை அடையாளம் கண்டறிந்து, வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி அங்கு கொசுப்புழு வளருகின்றனவா என ஆய்வு மேற்கொண்டு, டெங்கு மற்றும் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இதுவரை 25,334 காலிமனையிடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுவரை 1,326 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், 763 காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாயம் நாள்தோறும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் 73 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×