search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி

    இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற உழைப்போம்: ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற உழைப்போம் என்று தொண்டர்களுக்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, அம்மாவால் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் இதயங்களில் நிறைந்துவிட்ட இயக்கம் அ.தி.மு.க. 48-வது ஆண்டிலே அடியெடுத்து வைக்கிறது.

    அண்ணா மறைவிற்குப் பிறகு, நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில் தான் கருணாநிதியை முதலமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர். அதற்கு மாறாக கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தினார். கொடுங்கோலாட்சி நடத்தினார். ஊழல் ஆட்சி நடத்தினார். அராஜக ஆட்சி நடத்தினார்... லஞ்ச, லாவண்ய ஆட்சி நடத்தினார். அவரை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கினார்.

    கருணாநிதி செய்த சதி, திமுகவுக்கு போதாத காலமானது. தமிழக மக்களுக்கு பொற்காலம் ஆனது. அ.தி.மு.க, தோன்றியது. தீய சக்தியின் ஆட்சியை வீழ்த்தி, தெய்வ சக்தியின் ஆட்சி மலர்ந்தது.

    அம்மாவின் வீரத்தால், விவேகத்தால் தீயசக்தி திமுகவுக்கு மரண அடி கிடைத்தது. வீர நாச்சியாராக வீறுகொண்டு எழுந்தார் அம்மா...

    திமுகவை திசை தெரியாமல் ஆக்கினார், தெறிக்க விட்டார். மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்று தவ வாழ்க்கை வாழ்ந்த தங்கத் தலைவி, ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக கழகத்தை உருவாக்கிய உன்னதத் தலைவி.

    எதிரிகளால் நெருங்க முடியாத இரும்புக் கோட்டையாக... துரோகிகளால் அழிக்க முடியாத எஃகுக் கோட்டையாக கழகத்தை கட்டிக் காத்த காவியத் தலைவி... தமிழக மக்களுக்காகவே திட்டங்கள் தீட்டிய திராவிடத் தலைவி...

    எனக்குப் பின்னாலும், கழகம் நூறாண்டுகள் நிலைத்து நிற்கும் என்று வீர முழக்கமிட்ட தலைவி.

    அரசியல் ரீதியாக எத்தனை, எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டு அல்லலுற்றபோதும், பொருளாதார நெருக்கடிகள் நேர்ந்தபோதும் துணிவுடன் அவற்றையெல்லாம் அஞ்சாமல் எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்று மெல்ல மெல்ல அனைவரும், ஆம் நம்மை எதிர்த்தோரும் கூட ஏற்றுப் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக இயக்கத்தையும், ஆட்சியையும் இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இந்தப் பொன்னான தருணத்தில் நம் முன் இருக்கும் அரசியல் பணிகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ளுவோம். இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற உழைத்திடுவோம்;

    விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிலைகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்ற நமது பணிகளை உடனடியாகத் தொடங்குவோம்.

    ஒற்றுமையுடன் அரசியல், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்போம்.

    கட்சி பணிகளில் எங்களுடன் தோளோடு, தோள் நின்று அனைத்து வகையிலும் உழைத்து வரும் கழக உடன்பிறப்புகளின் உழைப்பு ஒரு போதும் வீண் போகாத வண்ணம் தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும் என்ற உறுதி மொழியை அளிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×