search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால் டேங்கர் லாரி
    X
    ஆவின் பால் டேங்கர் லாரி

    தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

    தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    சேலம்:

    தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டது.

    ஆவின் பால்

    இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கொண்டு வர கால தாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக 6 மாத காலம் பழைய டெண்டர் விதிமுறைப்படியும், அதே வாடகைக்கும் டேங்கர் லாரிகளை இயக்குமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. கடந்த ஜூன் மாதத்துடன் இந்த கால அவகாசமும் முடிவடைந்தது. ஆனால் தற்போது வரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.

    கடந்த 10-ந் தேதி புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆவின் நிர்வாகத்தால் அந்த டெண்டர் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையொட்டி வாடகை நிர்ணயம் செய்ய புதிய ஒப்பந்தத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இதையொட்டி சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் விஜய்பாபு தலைமையில் சேலத்தில் ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வாடகை நிலுவைத்தொகையை உடனே வழங்குவதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் கூறியதாவது:-

    ஆவின் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ.15 கோடி வரை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கான வாடகை நிலுவைத்தொகையை உடனே வழங்குவதாக ஆவின் பொது மேலாளர் தெரிவித்து உள்ளார். எனவே தற்காலிகமாக 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

    2 நாட்களுக்குள் சென்னையில் ஆவின் நிர்வாக இயக்குனருடன் வாடகை நிர்ணயம் செய்ய புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் சுமுக தீர்வு ஏற்படவில்லை என்றால் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×