search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க அதிமுக தான் காரணம்- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி பதில்

    அ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தல் வருவதற்கு காரணமே காங்கிரசின் சுயநலம் தான் என்று பேசியிருக்கிறார்.

    இத்தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருப்பதால் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதனால் தொகுதி மக்களிடையே இருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காக இத்தகைய மலிவான பிரசாரத்தை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக  22 சட்டமன்றத் தொகுதிகளில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க. தான் காரணமாகும். இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

    நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பொய் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் போடிநாயக்கனூர், பர்கூர், காங்கயம், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா அந்தந்த ஊரைச் சேர்ந்தவரா ? அங்கு போட்டியிடுகிற போது அவர் உள்ளூர்க்காரரா? வெளியூர்காரரா? எனவே, ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸ் வேட்பாளருக்கு பொருந்தாதா ?

    அதேபோல, திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த விஜிலா சத்யானந்தை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்த காரணத்தால் அங்கு இடைத்தேர்தல் ஏற்பட்டது. இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டதாக எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா?

    நாங்குநேரி இடைத்தேர்தல் வருவதற்கு காரணம் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, சுய நலத்திற்காக கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்று எடப்பாடி குறிப்பிட்டு இருக்கிறார்.

    அன்றைய நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி என்பது மார்‌ஷல் நேசமணி மறைவிற்குப் பிறகு, 1968-ல் காமராஜரை தேர்ந்தெடுத்த தொகுதியாகும்.

    ஒரு மிகப்பெரிய லட்சிய நோக்கத்திற்காக அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பட்டதே தவிர, இதற்கு வேறு விதமான காரணங்கள் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட, திசைதிருப்புகிற செயலாகும்.

    நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாண்டு காலம் எச். வசந்தகுமார் செய்த பணிகளைப் போல, வேறு எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்திருக்க முடியாது.

    இத்தகைய பணிகள் தொடர்ந்து நடைபெற்றிட காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிற ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×