search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ்
    X
    ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ்

    சேலம் ஆட்டோ டிரைவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு

    சேலத்தில் ஆட்டோ டிரைவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காகா பாளையத்தை அடுத்த செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42), ஆட்டோ டிரைவர்.

    இவர் ஒரு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோகன்ராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோகன்ராஜ் பயன்படுத்திய செல்போன்களை ஆய்வு செய்தபோது அதில் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ மற்றும் சில பெண்களின் ஆபாச வீடியோ, போட்டோக்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோகன்ராஜின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் சதாசிவம், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

    மோகன்ராஜ் தனது செல்போனை நண்பர் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். அந்த செல்போனை பார்த்த அவர் அதில் இருந்த ஆபாச வீடியோக்களை தனது செல்போனுக்கு பதிவிறக்கம் செய்து அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவரும் சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் மணிகண்டன் வைத்திருந்த செல்போன்களில் சில பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் பணம் மற்றும் நகையை பறித்துச் சென்ற வழக்கில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மேலும் இந்த வழக்கில் அரசியல் பிரமுகர் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் இதில் தொடர்புடையவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆட்டோ டிரைவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும். எங்களிடம் புகார் அளிக்க அச்சப்பட்டால் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவர்கள் யார்? என்ற விபரம் ரகசியமாக வைக்கப்படும். அதன் படி ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் ஆட்டோ டிரைவர்கள் மீது மேலும் சிலர் புகார் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×